×

ஆற்காடு சாலை சீரமைப்பு பணி ஒரு வாரத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நடந்து வரும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நெடுஞ்சாலை துறை சார்பில் மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் ரூ.4.5 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளையும், ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் ரூ.2.23 கோடியில் முடிவுற்ற சாலை பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சென்னை மெட்ரோ ரயில் பணிகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்வதற்கும், பணிகளை விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குழாய்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டவுடன் நெடுஞ்சாலைத் துறையால் இந்த சாலை போர்க்கால அடிப்படையில் ரூ.4.5 கோடியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதை முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து, வளசரவாக்கம் முதல் வடபழனி சிக்னல் வரை நடந்து வரும் சாலை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மெட்ரோ ரயில் திட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலை சீரமைப்பு பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘‘கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்து வரும் மழையாலும் மற்றும் பிற துறைகளின் பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந்துள்ளது. சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து கழிவுநீரை அகற்றி வருகின்றன. மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரைமப்புப் பணிகளையும் மெட்ரோ ரயில் தூண் பணிகள் முடிவைடந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளனர். ஒருவாரத்தில் இந்த பணிகள் முடிக்கப்படும்,’’ என்றார்.

 

The post ஆற்காடு சாலை சீரமைப்பு பணி ஒரு வாரத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Arcot ,Metro Rail Administration ,Chennai ,Northeast Monsoon ,Tamil Nadu ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...